இன்றைய சிந்தனை...

உங்கள் சிந்தனைக்கு

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்பவேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனேயே தொடங்க வேண்டும்.
Showing posts with label துணுக்குகள். Show all posts
Showing posts with label துணுக்குகள். Show all posts

July 20, 2014

இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-02)


ஆரம்பிக்க முன், 
கடந்த 4 வருடங்களாக இந்த முகவரியில் IT CORNER தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதே வகையில் தொழில்நுட்ப செய்திகனை பகிர்கிற நுாற்றுக்கணக்கான தளங்கள் இருந்தாலும் முன்னர் நீங்களறியாத புதிய தகவல்களையும் ஆழமான பல நுட்பபதிவுகளையும் பகிர்வதால் இந்தவலைப்பதிவு தனித்துவம் பெறுவது நீங்களறிந்ததே, சளைக்காமல் இந்த 4 ஆண்டுகளையும் கடக்க உங்கள் போன்றவர்களின் ஆதரவுதான் உந்துசக்தி. Facebook, google+ போன்ற சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் தரும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்தும் விதவிதமாக இங்கே தகவல்களை பகிர்ந்தாலும் தொடர்வாசகர்களாகிய உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது முக்கியமாகையால், தகவல்தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் பற்றி பின்னுாட்டங்களிலோ அல்லது சமூகவலைத்தளங்களிலோ பகிர்ந்துகொண்டால் இந்த பயணம் இன்னும் இனிதாகும். 
நன்றிகளோடு

இணையத்தில் சாதாரணமாக நாம் அறிந்த பொதுமைப்பாடான சமூக வலைத்தளங்களை தவிர்த்து தனித்துவமான சிறப்பம்சங்களோடு இருக்கின்ற வினோத தளங்களை பட்டியலிடுகின்ற முயற்சியின் இறுதிப்பாகமூடாக மீண்டும் இந்த மாதத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்ச்சி. இந்தப்பதிவிலும் மேலும் சில சமூக வலைத்தங்களை பார்க்கலாம்.

# Twitch

நீங்கள் வீடியோ விளையாட்டு பிரியராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த தளம் அறிமுகமாயிருக்கும். வீடியோ விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் தங்களின் விளையாட்டுக்களை நேரடியாக இங்கே ஒலிபரப்புகிறார்கள். மற்றவர்கள் கருத்து சொல்கிறார்கள். வீடியோ விளையாட்டையெல்லாம் எப்படி பார்ப்பது என நினைக்கிறீர்களா? இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக 2000-3000க்கிடையிலான பயனர்கள் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் Xbox, PlayStation போன்ற பிரபல நிறுவனத்தயாரிப்புக்கான ஆரம்ப வைபவங்கள் போன்றனவும் இங்கேதான் நடைபெறுகின்றன. நேரடிஒளிபரப்புகளை மேற்கொள்ளவென உள்ள Justintv தளத்தின் உப பிரிவுதான் இத்தளம். 
முகவரி: www.twitch.com

# PatientsLikeMe

இதுவும் கொஞ்சம் வித்தியாசமான சமூகவலைத்தளம், அதாவது தங்கள் வாழ்க்கையில் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களுக்கு ஆளாகி சமூதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான தளமாகும். தங்கள் போன்ற ஏனையவர்களோடு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை பரிமாற வழிசெய்கிறது இந்த தளம். மேலும் குறிந்த நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருந்துகளை எடுக்க இந்ததளம் உதவுகிறது. 2006முதல் இயங்கிவருகிறது. 
முகவரி: http://www.patientslikeme.com/

# SocialVibe

உலகம் முழுவதும் இயங்கிவருகின்ற அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கின்றது இவ்வலைத்தளம். அதுமட்டுமல்லாமல் 4லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் இங்கே இருக்கிறார்கள். தங்கள் செயற்பாடுகள் பற்றி இங்கே பகிர்கிறார்கள், அவசர உதவிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். நீங்களும் இந்த கண்ணியமிக்க குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
முகவரி: socialvibe.com 

# CafeMom

உலகிலுள்ள உறவுகளில் தாய்மை தனித்துவமானது, அவ்வாறான தாய்மார்களுக்கான தனியான சமூகவலைத்தளம்தான் CafeMom. தாய்மார்கள் தங்கள் போன்ற ஏனைய தாய்மார்களுடன் கருத்துக்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் தங்கள் செல்லக்குழந்தைகளின் குறும்புகளையும் காணொளிகளாக புகைப்படங்களாக பதிவேற்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய தளம். மேலும் இதன் சிறப்புக்களை தெரிந்து கொள்ள 
முகவரி: Cafemom.com

# DailyStrength

இவ்வுலகில் நீண்டநாள் வாழ்க்கைக்காக நாம் எடுக்கின்ற முயற்சி அளப்பரியது. இவ்வாறு எமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உடல் உள ரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள சிறந்த சமூகவலைத்தளமாகும். இதுபற்றிய ஆலோசனைகளை வழங்குகின்ற நிபுணர்கள் இங்கே தங்கள் கருத்துக்களை பகிர்கிறார்கள். 
முகவரி: http://www.dailystrength.org/

# ShareTheMusic

இது முற்றிலுமான ஒரு இசைக்குழுமம், நீங்களும் இசை மீது தீவிர ஈடுபாடுடையவராக இருந்தால் நீங்கள் ரசிக்கின்ற இசையை ஏனைய நண்பர்களோடு பகிரவும் லட்சக்கணக்கான இசைக்கோப்புகளை கேட்கவும் வழி செய்கிறது இந்த இணையத்தளம். ஆனாலும் இதே சேவையை சற்று வித்தியாசமாக வழங்குகின்ற பல சமூகவலைத்தளங்கள் இருக்கின்றன. உதாரணமாக Audimated.com, Buzznet, Gogoyoko, Indaba Music, Last.fm, MOG, Playlist.com, ReverbNation.com, SoundCloud போன்றவற்றை கூறலாம். 
முகவரி: www.ShareTheMusic.com

பகிர்ந்துகொண்ட தளங்கள் தகவல்கள் அனைத்தும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன், மற்றுமொரு பதிவில் சந்திப்போம். உடனுக்குடனான தொழில்நுட்ப தகவல்களுக்கு பேஸ்புக் மற்றும் கூகிள் ப்ளஸ் போன்றவற்றில் பின்தொடருங்கள்.

July 13, 2014

இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-01)


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்பாதையில் இணையத்தின் கண்டுபிடிப்பு தகவல் தொழில்நுட்பத்தையே வேறொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றது எனலாம். இந்த இணையம் பல்வேறு தரப்பினருக்கும் பலவாறாகவும் பயன்படுகின்ற போதிலும் இணையத்தோடு கைகுலுக்குகின்ற ஒரு தனிமனிதன் பெற்றுக்கொள்கின்ற மிகப்பெரிய வசதி தொடர்பாடல்தான். அதாவது ஆரம்பகாலத்தில் மனிதன் இணையமூடாக வந்த மின்னஞ்சல் வசதி மூலமாக தன் தொடர்பாடலை மேம்படுத்தி நட்புக்கள், உறவுகளை வலுப்படுத்தி கொண்டான். இவை முந்தைய கணினி தலைமுறையுடன் (4th Generation) கழிய, நாம் நுழைந்திருக்கும் இந்த கணினி தலைமுறையில் (5th Generation) சமூக வலைத்தளங்கள் என்ற புதிய கருவி தோற்றம் பெற்றதும் இன்று இவை சமூகத்தையே ஆட்டுவிக்கும் மிகப்பாரிய சக்தியாக உருவெடுத்திருப்பதும் கண்கூடு. இருந்தபடியே உலகின் பல்வேறு மூலைகளிலும் வாழும் எந்தவொரு தனிநபருடனும் இலகுவாக தொடர்புகொள்ள முடிவதும், தகவல்களை பரிமாற முடிவதும் இதன் சிறப்பு. சமூக வலைத்தளங்கள் (Social networking websitees) பற்றி பேசுகையில் அடுத்துவருவது இந்த சேவையை வழங்குகின்ற நிறுவனங்கள். Facebook, Twitter, Google+ போன்றன இவற்றிற்கான உதாரணங்கள்.


இந்த நிறுவனங்களும் அவற்றின் இணையத்தளங்களும் சாதரணமாக நமக்கு பரிட்சயமாகிப்போனவை. இவை பொதுமைப்பாடான (General) செயற்பாடுகளை கொண்டவை. ஆனால் இணையத்தில் நாமறியாத ஆயிரக்கணக்கான பல வினோத சமூகவலைத்தளங்கள் வித்தியாசமான தன்மைகளுடன் உலாவருகின்றன. 

நாள்தோறும் Facebook, Twitter, Google+ என்று அலைகின்ற உங்கள் இணையநட்பு உலாவலை சுவாரஸ்யமாக்குவதற்கான, நான் சொன்ன இந்த வினோத சமூகவலைத்தளங்களின் தொகுப்புதான் இந்தபதிவு. நட்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

# Advogato


கணினித்துறைசார் செயல்நிரலாளர்களுக்கான (Software Developers) சமூக வலைத்தளமாகும். அதிலும் Open Source என அழைக்கப்படுகின்ற திறந்தமூல செய்நிரல்களை வடிவமைக்கின்றவர்கள் ஒன்றுகூடுகின்ற இணையத்தளம். ஆயிரக்கணக்கான கணினி செய்நிரல் வடிவமைப்பாளர்கள் தினமும் இங்கு தங்கள் தொழில்சார்ந்து பல விடயங்களை பகிர்கிறார்கள். தங்கள் மென்பொருள் படைப்புக்கள் பகிர்ந்துகொண்டு அவைபற்றிய கருத்துக்களையும் அறிந்து கொள்கிறார்கள். இந்த வலைத்தளம் 1999முதல் இயங்கிவருகிறது. கிட்டதட்ட 13,500க்கும் அதிகமான அங்கத்தவர்களுடன் இயங்குகிறது. நீங்களும் ஒரு செய்நிரல் வடிவமைப்பாளராக இருந்தால் உடனே இணைந்து கொள்ளுங்கள்.
முகவரி: http://www.advogato.org/

# deviantART

பெயரிலுள்ளது போன்றே சித்திரக்கலைஞர்களுக்கான சமூகவலைத்தளம் இது. இங்கே அங்கத்தவராக நமக்கு சித்திரம் கைவந்த கலையாக இருக்க வேண்டுமென்பதில்லை. சாதரணமாக நாம் பிரபல ஓவியர்களையும் அவர்களின் படைப்புகளையும் ரசித்திருப்போம், ஆனால் பல கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இங்கே பகிர்கிறார்கள். அது பற்றி விவாதிக்கிறார்கள். பல ஓவியப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன. 22கோடிக்கும் அதிகமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். 2000ம் ஆண்டு முதல் இந்த தளம் இயங்கிவருகிறது.
முகவரி: http://www.deviantart.com/

# italki.com

இதுவும் சற்று வித்தியாசமான சமூகவலைத்தளம்தான். புதிய புதிய மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவரா அப்படியானால் உங்களுக்கான தளம் இதுதான். 100க்கும் அதிகமான மொழி பேசுகிறவர்கள் மொழிகளை கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்து கொண்டும் இருக்கிறார்கள். மேலோட்டமாக உலாவினாலே (browse) பல சுவாரஸ்யமான மொழிகள், வார்த்தைகளை அறிந்துகொள்ளலாம். நம் தமிழ் இங்கு எந்தளவில் இருக்கிறதென்று நான் ஆராயவில்லை. யாராவது பயன்படுத்துகிறவர்கள் பின்னுாட்டங்களில் பகிருங்கள். நீங்களும் இன்றே தமிழ் வகுப்பு நடாத்த தொடங்கலாமே..
முகவரி: http://www.italki.com/

# WeeWorld

இணையம் எந்தளவு சுதந்திரமான ஊடகமோ அந்தளவுக்கு தனிமனித பாதுகாப்பும் சுதந்திரமும் குறைவான ஊடகமும் கூட. இதனாலேயே பிரபலமான சமூக வலைத்தளங்கள் 16வயதுக்கு குறைந்த Teenagersஐ அனுமதிப்பதில்லை. ஆனால் அவ்வாறான சிறுவர்கள் தங்கள் தனித்துவமான உலகை தங்களைப்போன்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள. இங்கு கணக்கு ஆரம்பிக்க வயதெல்லை 9 தொடக்கம் 17 இற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
முகவரி: http://www.weeworld.com/

# LibraryThing

புத்தக வாசிப்பு என்பது இன்று மிகவும் அருகிவிட்ட ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக பொழுதுபோக்கு. அவ்வாறான புத்தக பிரயர்களை ஒன்றுசேர்க்கின்றது இந்த இணையத்தளம். 18பில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் உண்டு. அடிப்படையில் இது Online Library அல்ல. நீங்கள் படிக்கின்ற புத்தகங்களை பற்றிய கருத்துக்களை் விமர்சனங்களையும் அந்த புத்தகத்திற்கான தரவிறக்க இணைப்புக்களையுமே இங்கு பகிரலாம்.
முகவரி: https://www.librarything.com/

# Cucumbertown

இது கொஞ்சம் ருசியான சமூகவலைத்தளம். சாப்பிட பிடிக்காதவர்கள் யார்? சாப்பாட்டு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் சுவையான உணவுகளை தயார்செய்யும் chefsஇற்கான சமூகவலைத்தளம். பிரபல ஹோட்டல்களின் chefsகூட இங்கே இருக்கிறார்கள். சுவையான உணவு செய்முறைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு அங்கத்தவராகுவதற்கு நீங்கள் சமையல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பதில்லை, சாதாணமாக நாம் செய்கின்ற உணவுகளின் செய்முறைகளை கூட பகிரலாம். ஏனையவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் பெற்று கொள்ளலாம்.
முகவரி: http://www.cucumbertown.com/

ஆயிரக்கணக்கான வினோத சமூக வலைத்தளங்களில் 6 ஐ மட்டும் இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அடுத்த பாகத்தில் வேறு வினோதமான 6 தளங்களோடு சந்திப்போம்.

"நட்புக்கள் தொடரும்"

April 2, 2014

பேஸ்புக் ப்ரைவசி (Privacy) சில ஆலாசனைகளும் வழிகாட்டல்களும்


மனிதகுல வரலாற்றில் கணினி, இணையம் இவை இரண்டினதும் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பாடலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. சில சமயங்களில் அவை முறையாக பயன்படுத்தப்பட தவறுகிற போது சமூகத்தில் எதிர்விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதிலும் எமது நாடு போன்ற கீழைத்தேயங்களில் எவ்வளவுதான் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும் இவ்வாறு தொழில்நுட்பம், கணினி, இணையம் என்று வருகின்ற போது 2/4 பகுதியினர் இன்றுவரை தெளிவற்ற/முறையற்ற பயன்பாட்டையே கொண்டிருக்கின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்ற உங்கள அறிவு மட்டத்தை அல்ல. ஒருவருக்கு கணினியில் தட்டச்சு செய்ய மட்டும்தான் தெரியும் என்றால் அதில் எந்த தவறுமில்லை. ஆனால் தெரிந்த அந்த விடயத்தை அவர் எந்தளவு தனக்கும் பிறர்க்கும் நன்மையுள்ளவாறு பயன்படுத்துகிறார் என்பதில் இருக்கிறது அவருடையதும் தொழில்நுட்பத்துடையதுமான வெற்றி. இன்றைய வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினர் சிறப்பானவர்கள், திறமைசாலிகள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல, இவற்றோடு தொழில்நுட்பம் என்ற பாரிய சக்தியும் அவர்களிடம் இருக்கிறது. இது எங்கள் முன்னோர்களின் உழைப்பால் விளைந்தவை, இவை எங்களை வளப்படுத்தவும் எமக்கு பின் வருகிறவர்களை வழிகாட்டவும்தான் பயன்படவேண்டுமே தவிர எங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள அல்ல. இனி 'பேஸ்புக்', இந்தச்சொல்லை தெரியாத இளையவர்கள் மட்டுமல்ல யாருமே இல்லை என்றளவுக்கு இது பிரபலம். சாதாரண இணையதளமாக உருவாகி இன்று மாபெரும் இணைய ஊடகமாக (cyber media) வளர்ந்திருக்கிறது. நாமனைவரும் இதை ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகிறோம். ஆனால் எங்களில் எத்தனை பேர் அதை சரியான முறையில் அதிலுள்ள Optionகளை சரியாக பயன்படுத்துகிறோம் என்றால் குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் பேஸ்புக்கில் உள்ள Tag என்ற வசதி மற்றவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதற்க்குதான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படியல்ல. நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த வேண்டுமா? இல்லலையா, எப்படி கணக்கு திறப்பது?, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது எப்படி? என்று இங்கு சொல்லமுடியாது. ஆனால் எங்கள் பேஸ்புக் பாவனைக்கு சவாலாயிருக்கின்ற இநத Privacy பற்றி சொல்லித்தரலாம். அப்படியாவது இலங்கையில் கடந்த சில வாரங்களில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும், இலங்கையில் முற்றாக பேஸ்புக் தளத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் தவிர்க்கலாம் அல்லவா? 

பேஸ்புக் இன்று இரண்டு பிரதான நோக்கத்திற்காக பாவிக்கப்படுகிறது.
  1. சாதாரணமாக தனிநபரொருவர் தனது நண்பர்கள் உறவுகளோடு உறவாடவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துதல்.
  2. ஒரு நிறுவனமோ/அமைப்பொன்றோ தங்களது நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தல்கள் மற்றும் பாவனையாளர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்துதல்.  
இதன் மூலமாக வெறுமனே நட்பு நோக்கத்திற்குரியவர்கள் மட்டும் வலம்வருமிடமென்று பேஸ்புக்கினை எண்ணிக்கொள்ளாதீர்கள். எனவே நீங்கள் பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய தகவல்களை பகிரும் ஒவ்வொருமுறையும் இருமுறை சிந்தியுங்கள். இதில் எதுவும் கட்டாயமில்லை. பரிந்துரைப்பு மட்டுமே.பேஸ்புக்கில் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இதனை பேஸ்புக் Privacy Settings என்கிறார்கள். நீங்கள் பேஸ்புக் இல் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் யார் யார் பார்க்க வேண்டும் என்று ஒழுங்குபடுத்துகின்ற பகுதி. இதில் கீழுள்ளது போல 3 பிரதான வகை உண்டு. அதாவது 


  • Only Me, இந்த தெரிவினை கொடுத்தால் குறித்த தகவலை நீங்கள் மட்டுமே காண முடியும்.
  • Friends Only, உங்கள் நண்பர்களோடு மட்டும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த வசதி.
  • Everyone./Public. பேஸ்புக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இணையத்தில் உலாவருகிறவர்களும் காண கூடியவகையில் அதாவது பேஸ்புக்கில் கணக்கு இல்லாத ஒருவராலும் இதனை காணமுடியும்.

மிகவும் கலைக்குரிய விடயமென்னவெனில் Defaultஆக இந்த வசதி Public/Friends Only என்பதில் இருக்கும். தகவல்களை பகிர்வதிலும் புகைப்படங்களை பதிவேற்றுவதில் பலருக்கும் இருக்கின்ற வேகம் அதில் உள்ள இந்த Privacy settings எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் இருப்பதில்லை. எனவே சாதாரண நிலைத்தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள், Profile Details போன்றவற்றை யார்யாருடன் பகிர வேண்டும் என சிந்தித்து பகிருங்கள். கூடியவரை கணினியிலிருந்து புகைப்படங்களை தரவேற்றுங்கள். நேரடியாக Mobile, Tablet போன்ற சாதனங்களில் இருந்து தரவேற்றுவதை தவர்க்கவும். அதே போன்று இப்போதெல்லாம் Smartphone யுகம். இவற்றில் உள்ள Synchronization என்ற வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். இணைய இணைப்பு இருந்தால் உங்களை அறியாமலே Galleryஇல் உள்ளவற்றை அவை பேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்றிவிடும். எனவே உங்கள் தேவைக்கேற்ப Sync settingsஐ மாற்றிக்கொள்ளுங்கள். 

அடுத்து உங்கள் நண்பர்களை நிர்வகிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பட்ட கணக்கில் ஆகக்கூடியது 5000 நண்பர்களை இணைத்து கொள்ளலாம். இதனை இன்னும் இலகுவாக்குவதற்காக பேஸ்புக் Friend List என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதாவது உங்கள் வகுப்பு நண்பர்கள், வேலைத்தள நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் இப்படியாக இன்னும் பல பிரிவுகளில் நண்பர்களை பிரித்துவைத்துக் கொள்ள முடிவதுடன் மேற்சொன்ன Privacy Settings போன்று தேவைப்படும் போது தகவல்களை குறிப்பிட்ட ஒரு Listஇல் உள்ளவர்களோடு மட்டும் பகிரவும் முடியும்.

இவை போன்ற இன்னும் பல வசதிகள் மூலம் எமது Privacyஐ பாதுகாக்க முடியும். இனி வருகின்ற உங்கள் சமூக வலைத்தள உலாவல் அனுபவங்கள் உங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்தரட்டும்.

January 25, 2014

நீங்களே உருவாக்கலாம் - ஒரு எளிய RAM Cleaner மென்பொருள்
2014ம் வருடம் பிறந்து 25வது நாளில்தான் இவ்வருடத்தின் முதல் பதிவு எழுத வேண்டும் என்ற சிந்தனை வந்தது. எனவே வேலைப்பளு, நேரப்பற்றாக்குறை இவற்றுக்கிடையில் சில மணிநேரங்களை கண்டுபிடித்து இப்பதிவை தயாரித்து தட்டச்சு செய்து பகிர்கிறேன். இதுவும் ஒரு Computer Trick வகையை சார்ந்த பதிவு/விடயம்தான். அதாவது நாம் கணினி என்ற சாதனத்தை பலவற்றுக்கும் பலவாறாகவும் பயன்படுத்துகிறோம் என்பது தெரியும். அதற்கேற்றால் போல விதம்விதமான மென்பொருள்களையும் உபயோகிக்கிறோம். 

அதே போன்று சரியான கால இடைவெளியில் கணினி பராமரிக்கப்பட்டால் மட்டுமே அதன் இயக்கம், வருவிளைவு ஆகியன உச்சமாக இருக்கும் என்பதும் தெரியும். இங்கே கணினி பராமரிப்பில் பல வகைகள் இருக்கின்றன. அதிலொன்றுதான் உங்களுடைய கணினியின் முதன்மை நினைவகமான RAM இனை சுத்தம் செய்வது (பௌதீக ரீதியாக அல்ல). இதற்காக பல மென்பொருள்கள் இலவசமாகவும் பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் கிடைக்கின்றன. பலருக்கு அதில் எது சிறந்தது? என்கின்ற பிரச்சினை வேறு. 

ஆனால் எங்களுடைய கணினியின் Notepad மென்பொருளைக் கொண்டே அதனை செய்து முடித்துவிடலாம். பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

Step 01: Notepad ஐ திறந்து பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள். 
                      
                                                                   "      FreeMem=Space(10240000000)     "

* இங்கு 1024 என்று குறிக்கப்பட்டது உங்களுடைய RAM இன் கொள்ளளவு ஆகும். நீங்கள் 512MB கொள்ளளவு உள்ள RAM ஐ பாவிப்பவரானால் மேலேயுள்ள Code ஐ 1024 இற்கு பதிலாக 512 என மாற்றுக.

Step 02: பின்னர் அந்த File ஐ Cleaner.vbs என்ற பெயரில் எங்குவேண்டுமானாலும் சேமியுங்கள். (Desktop ஆக இருப்பது நல்லது.)

Step 03: நீங்கள் Save செய்த இடத்தில் தோன்றுகின்ற Icon ஐ இரட்டை கிளிக் செய்து Run பண்ணினால் உங்கள் RAM சுத்தம் செய்யப்பட்டுவிடும். 

கருத்துக்களை பின்னூட்டங்காக பகிருங்கள்.

November 27, 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி 03)

<< பகுதி 01
<< பகுதி 02

 

ஒரு நீண்ட பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டோம். பின் நாங்கள் துருவ வேண்டிய வலையமைப்பிலிருந்து வருகின்ற Data packetsஐ capture செய்வது பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்த்தோம். இனி அவற்றை சேமித்து எவ்வாறு decryption செய்வது என்பதிலிருந்து இருந்து மூன்றாம் பாகம்.

Step 05: கடவுச்சொல்லை துருவுதல் (Hack the password)
------------------------------------------------------------------------
* நான் சொன்னதுபடியே 100000 வரை அல்லது அதற்கு மேலாக (இந்த தொகையைவிட நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகம் capture செய்கிறீர்களோ அந்தளவு வேகமாக சுலபமாக cracking அமையும்.) data packets capture செய்திருப்பீர்கள். இனி அவற்றை save செய்ய வேண்டும். commview மென்பொருளின் packets tab இற்கு செல்லுங்கள். இதுவரை நீங்கள் capture செய்த data packets அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள அனைத்தையும் select (Ctrl+A)செய்யுங்கள்.

* பின்னர் right click செய்து பெறப்படும் menuவில் save packets as என்பதை click செய்யுங்கள். save as மெனு தோன்றும். நான் முன்னர் சொன்னது போல தனியான பாதுகாப்பான folder இல் packets என்ற file name இல் save செய்யுங்கள்.* அடுத்து commview மென்பொருளை மூடாமல் நீங்கள் packetsஐ சேவ் செய்த இடத்திற்கு சென்றால் packets என்ற பெயரில் commviewஇன் iconஇல் ஒரு fileஐ காண்பீர்கள். அதனை திறந்து கொள்ளுங்கள். இதன் போது கீழுள்ளது போல window தோன்றும்.

* அதில் file -> Export -> Wire shark tcpdump format என்பதை தெரிவு செய்யுங்கள். expackets என்ற பெயரில் அதனையும் தனியான ஓரிடத்தில் save செய்யுங்கள். இது .cap வடிவில் save ஆகும்.

* பின் நீங்கள் தரவிறக்கிய folderஇனுள் உள்ள aircrack-ng-1.2-beta1-win என்ற folderஐ திறந்து அதனுள் உள்ள bin folderஐ திறங்கள். பின் அதிலுள்ள Aircrack-ng GUI.exe ஐ திறந்து கொள்ளுங்கள்.* தோன்றும் மெனுவில் filename என்பதற்கு நேரே உள்ள choose என்பதில் நீங்கள் save செய்த expackets.cap ஐ தெரிவு செய்யுங்கள். பின் encryption என்பதில் WEP ஐ தெரிவு செய்து Launch கிளிக் செய்யுங்கள்.

* நீங்கள் 5000IV க்கு அதிகமாக capture செய்திருந்தால் நீங்கள் இவ்வளவு நேரமும் ஆவலோடு எதிர்பார்த்த நீங்கள் கண்டுபிடிக்க நினைத்த paswword தோன்றும். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றும். உதாரணமாக 
password 89281 என்பதாக இருந்தால் அங்கு (89:2:81:) என்று தோன்றும். அதிலுள்ள : () போன்றவற்றை நீக்கினால் password கிடைக்கும். 

* இனி வழமைபோல உங்கள் கைவரிசையை காட்ட வேண்டிய நேரம்... WPA, WPA2-PSk போன்ற wifi networkகளை துருவுதல் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.


October 25, 2013

இந்த விட்ஜெட்கள் (Widgets) உங்கள் வலைப்பதிவிலும்/இணையத்தளத்திலும் இருக்கின்றனவா?


கணினி மற்றும் இணையம் ஆகியன அத்தியாவசியமாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். எங்களில் பலரும் பல தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்துகிறோம். அதில் தினமும் பல நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் உலாவருகிறோம். ஒவ்வொரு தளங்களின் வடிவமைப்பும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தின் இடது, வலது அல்லது இருபுறங்களிலும் நீங்கள் Sidebar இனை அவதானித்திருப்பீர்கள். அந்த வலைப்பக்கங்களின் முக்கிய பகுதியாக அவை இருக்கும். நீங்கள் வலைத்தள பராமரிப்பாளராக இருந்தால் நீங்கள் உங்கள் வலைத்தளங்களின் உள்ளடக்கங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை Sidebar இற்கும் கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. எப்போதும் வலைத்தள பராமரிப்பாளர்களின் கவனம் எல்லாம் வாசகர்களை தங்கள் தளங்களில் அதிக நேரம் தக்கவைத்திருப்பதுதான். இந்த வேலையில் Sidebar களுக்கும் முக்கிய பங்குண்டு. எனவே நம்மில் பலரும் ஏகப்பட்ட விட்ஜெட்களை Sidebar இல் இணைத்திருப்போம். சிலவேளை இது உங்கள் நோக்கத்திற்கு எதிராகவும் வேலை செய்யக்கூடும். எனவே இந்தப் பதிவில் உங்கள் வலைத்தளத்தின் Sidebar கொண்டிருக்க வேண்டிய சில முக்கிய விட்ஜெட்களையும் தெரிவு ரீதியான (Optional) விட்ஜெட்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

#1 Search Box (தேடுதல் பெட்டி)

ஒரு வலைத்தளத்தின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று இது. உங்கள் தளத்துக்கு வருகின்ற வாசகர்கள் பதிவுகளை குறிச்சொல் மூலம் தேடிப்படிக்க உதவுகின்ற பகுதி. உங்கள் Sidebar இல் முதலாவதாக இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இலகுவாக அடையாளம் காண முடியும். அல்லது Navigation bar இலும் இணைக்கப்படலாம். பல வலைத்தள பராமரிப்பு சேவை வழங்குனர்களிடம் இது Default Option ஆக வருகிறது.

#2 Subscription Widget (சந்தாதாரர் பகுதி)

உங்கள் வலைத்தளத்தில் இணைக்க வேண்டிய அடுத்த மிக முக்கிய பகுதி இதுவாகும். அதாவது உங்கள் பதிவுகளையோ அல்லது செய்திகளையோ வாசகர்கள் தங்கள் Inbox இலேயே பெற வழி செய்யும் சேவையே Subscription எனப்படுகிறது. RSS Feed சேவையும் இதிலடங்கும். ஆனாலும் உங்கள் செய்திகள் முழுவதையும் அவர்கள் Inbox இல் படிக்காமல் மேலும் படிக்க என்ற இணைப்பு மூலம் வலைத்தளத்திற்கு வரச்செய்வதே சிறந்தது. இதுவும் உங்கள் பக்கத்தின் Visitors மற்றும் Page Views ஐ அதிகரிக்கும்.

#3 Recent Posts (அண்மைய பதிவுகள்)

உங்கள் வலைப்பதிவோ அல்லது இணையத்தளமோ ஒரு பக்கத்தில் 10இற்கும் அதிகமான பதிவுகளை காட்டுவதாக இருந்தால் உங்கள் Sidebar இந்த பகுதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக சில வாசகர்கள் பதிவுகளை தேடிப்படிக்க கொஞ்சம் சோம்பல்படுவர். அத்தோடு அதிக பதிவுகள் ஒரு பக்கத்தில் வந்தால் பதிவுகளை வாசிப்பது சிரமமாகும். எனவே உங்களின் அண்மைக்கால பதிவுகள் மற்றும் பிரபலமான பதிவுகள் கொண்ட பகுதியை Sidebar இல் இணைத்தீர்களானால் பதிவுகளை தேடுவது இலகு. ஆனால் இது தன்னியக்கமாக (Automatic) புதுப்பிக்கப்படகூடியவாறு (Dynamic) இருத்தல் நன்று.

#4 Categories/Archive (பதிவுகளின் வகைகள்/தொகுப்பு)

இந்தப்பகுதியையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். காரணம் Search போன்றே எல்லா வகை தளங்களிலும் Default ஆக வருகின்ற பகுதி. அதாவது உங்கள் பதிவுகளை பதிவிட்ட மாத, வருட அடிப்படையில் காட்டுவதையே Archive என்போம். அல்லது நீங்கள் செய்திகளை பல வகைகளாக பிரித்திருந்தால் அவற்றை காண்பிப்பதை Categories எனலாம். இரண்டுமோ அல்லது ஏதாவது ஒன்றோ உங்கள் தளத்தில் இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள்.

#5 Recent Comments (சமீபத்தைய கருத்துக்கள்)

இது உங்கள் தளத்துக்கு வந்த வாசகர்கள் உங்கள் பதிவுகளில் எழுதிச்சென்ற பின்னூட்டங்ளை தொகுத்து காட்டுகின்ற பகுதியாகும். பின்னூட்டங்களே எப்போதும் உங்கள் தளத்திற்கு தொடர்ச்சியாக வாசகர்களை வரச்செய்யும் எனவே இது உங்கள் Sidebar இல் மிக முக்கியமானது.

#6 Blog Stats (தளப்புள்ளி விபரம்)

இது ஒரு மூன்றாம் நபர் சேவை (Third Party widget) மூலமாக இணைக்ககூடியது. உங்கள் இணையப்பக்கம் சம்பந்தமான புள்ளிவிபரங்களையும் Alexa Rank, Online People போன்ற தகவல்களையும் காட்டும் படியாக அமைத்து கொள்ளுங்கள். Blogger பயனர்கள் இப்போது கூகிள் வழங்குகின்ற Blog Stats இணைக்க முடியும்.

இவை தவிர… 

நான் மேலே சொன்ன ஆறு விட்ஜெட்களும் கண்டிப்பாக ஒரு வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இடம்பெற வேண்டியவை. இவற்றோடு மேலதிகமாக YouTube Subscription, Social Media Profiles, Calendar மற்றும் விளம்பரங்களும் இணைக்கப்படலாம். ஆனால் இணைய உலாவிகளில் உங்கள் பக்கம் தரவிறங்கும் வேகத்தில் விட்ஜெட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். சந்தேகங்களையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

October 18, 2013

இணைய வெளி – இது நீங்கள் அறிந்திராத வினோதங்களின் தொகுப்பு (தொடர் பதிவு)


கொண்டாட்டங்கள், விடுமுறைகள், மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் எனது மற்றொரு தொழில்நுட்ப பதிவு மூலமாக உங்களோடு இணைவது மகிழ்ச்சி தருகிறது. மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியும் அதன் பயனாக விளைந்த கண்டுபிடிப்புகளும் தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சிகளும் வியப்புக்குரியன. அந்தவகையில் நாங்கள் இப்போது கணினி மற்றும் இணையம் என்ற இந்த இரண்டின் ஆளுகைக்குட்பட்ட யுகத்தில் இருப்பது நீங்களறிந்ததே. குறிப்பாக இணையம் எங்கள் கைகளுக்கு வந்த பிறகு இன்றைய தலைமுறையினரின் தொழில் தொடங்கி பொழுதுபோக்கு ஏன் சில சமயங்களில் திருமணம் வரை அதில்தான் நடந்தேறுகிறது

இவ்வாறு எல்லாமுமாக இருக்கின்ற இணையத்தில் உலா வருகின்ற உங்களுக்கு இதுவரை உங்கள் இணைய உலாவல் (Web Browsing) அனுபவத்தில் கிடைத்திருக்காத என்று நான் நம்புகின்ற சில இணையத்தின் பக்கங்களை அறிமுகப்படுத்துகின்ற சுவாரஸ்யமான பதிவுதான் இணையவெளி. அதாவது பலகோடிக்கணக்கான இணையப்பக்கங்களின் பின்னலில் உருவானதே இணையம். இதில் எல்லா பக்கங்களும் ஒரே மாதிரியாக ஒரே வகையாக அமைவதில்லை. இணையத்தில் சுவாரஸ்யம் தேடி உலவுகின்ற (Browsing) உங்களுக்கு அந்த இணையமே சுவாரஸ்யமானால்தொடர்ந்து படியுங்கள்.   

#1 உங்கள் சுட்டியை (Mouse) சுட்டும் படங்கள்

இணையப்பரப்பில் உலாவருகின்ற வினோத தளங்களில் உங்கள் கணினியின் சுட்டியோடு (Mouse) கொஞ்சம் விளையாடிப்பார்க்கின்ற இணையத்தளம் இது. இந்த இணையத்தளத்தை திறக்கின்ற போது உங்களுக்கு தெரிகின்ற கறுப்பான பகுதியில் Mouse Cursor இனை சில செக்கன்களுக்கு நிறுத்தி வைத்தீர்களானால் உங்கள் Mouse Cursor எந்தப்பகுதியில் உள்ளதோ அதை காட்டுகின்றது போல Random ஆக Image தோன்றுகிறது. முயற்ச்சித்து பாருங்கள்
முகவரி: http://www.pointerpointer.com/

#2 உங்கள் நண்பர் எத்தனை மணிநேரம் தூங்குகிறார்?

நீங்கள் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இதை முயற்ச்சித்து பாருங்கள். அதாவது உங்கள் ட்விட்டர் நண்பர் துங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறார் என்பதை கணக்கிட்டு சொல்லுகின்றது இந்த தளம். குறித்த நபரின் இறுதி 1000 பதிவுகளை கணிப்பிட்டு முடிவுகளை காட்சிப்படுத்துகிறது.
முகவரி: http://sleepingtime.org

#3 திகில் திரைப்பட இணையத்தளம்

Interactive Movie வகையை சேர்ந்த இணையத்தளம். அதாவது இங்கு சென்று Begin என்பதை கிளிக் செய்தீர்களானால் உங்களை ஒரு காணொளி பக்கத்திற்கு அழைத்து செல்லும். அந்த காணொளியானது திரைப்படம் போன்று ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த கதை எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக ஒரு கட்டத்தில் ஒருவன் கொலை செய்யப்படும் போது உங்களிடம் ஆம் இல்லை என்று கேட்கப்படுகிறது. உங்கள் பதில் ஆம் என்றால் குறித்த நபர் கொல்லப்பட்டு திரைக்கதை நகரும். இல்லையென்றால் கொல்லப்படாமல் கதை தொடர்ந்து செல்லும். ஆனால் கொடுரம் திகில் நிறைந்த காட்சிகளே அதிகம் என்பதால் அவதானம் கொள்க.

#4 ஸ்நெப் (Snap) குமிழிகள்
மேலுள்ள படத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாங்கள் சாதாரணமாக உடையக்கூடிய பொருட்களை அனுப்புவதற்கு பயன்படுத்துகின்ற காற்று குமிழிகள் கொண்ட சுற்றுறையை உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்கள் சிறுவயதுகளில் இவ்வாறான குமிழிகளை உடைத்து விளையாடுவதில் அலாதி பிரியமுடையவராக இருந்திருந்தீர்களானால் அதே வேலையை கொஞ்சம் மொடர்னாக (Modern) உங்கள் கணினியில் செய்யக்கூடிய வாய்ப்பை இந்த தளம் தருகிறது. Bubble Wrap Simulator என்ற பெயரில் பொழுதுபோக்கு விளையாட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடிப் பாருங்கள்.
முகவரி: http://www.snapbubbles.com/

#5 முப்பரிமாண (3D) தோற்றத்தை உங்கள் சுட்டியோடு உருவாக்குங்கள்

ஊடாடு (Interactive) நிலையுடன் கூடிய முப்பரிமான வரைதலை (Drawing) சாத்தியமாக்குகின்ற இணையத்தளம்தான் இது. உங்களின் Mouse cursor இனை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடியதாக இருப்பதுவே இதன் சிறப்பம்சம். முயற்சித்து பாருங்கள்.

என்னுடைய தேடல் அனுபவத்தில் கிடைத்த வினோத தளங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது போன்ற இன்னும் பல தளங்களை வருகின்ற காலங்களில் பகிருகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

October 13, 2013

தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 01)


ஆரம்பிக்க முன்…

மீண்டும் பல நாட்கள் கழித்து எனது வலைப்பதிவின் ஒரு பதிவு மூலமாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி… கடந்த சில வாரங்களாக எனது இந்த தளத்தின் வாசகர்களின் வருகை அதிகரித்திருக்கிறது, எனது வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கின்ற நண்பர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள்… முதலாவது தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக நீங்கள் இங்கு வந்து பதிவுகளை (Posts) வாசித்து பயன் பெறுகிறீர்கள் அதோடு நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களையும் மற்றும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் குறிப்பிடுங்கள் மேலும் இது போன்று தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக இருக்கின்ற உங்கள் நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுபோலவே மிக முக்கியமானது எனது முன்னைய கால பதிவுகளில் தரவிறக்கத்திற்காகவோ அல்லது ஏதேனும் இணையத்தள முகவரிகளோ பதிவுகளில் வழங்கப்பட்டிருந்தால் சேவையக மாற்றங்கள் காரணமாக தற்காலங்களில் அவை செயல்படாமல் போகலாம்… அவ்வாறான இணைப்புக்களை மறக்காமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.. நன்றி.

******************************************************************************************************************************************************************

கணினி துறையை பொறுத்தவரை இணையத்தின் தோற்றம் மிக முக்கிய படிக்கல் என்றாலும் இணையத்தின் வேகத்தினை துரிதப்படுத்திய அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னரே இணையத்தின் முழுமையான பயன்பாடும் அவசியமும் உணரப்பட்டதெனலாம். அந்தவகையில் இணையம் மூலமாக என்னவெல்லாம் சாதிக்கின்றோம், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் எமக்கு நன்கு தெரிந்ததே… அந்த வரிசையில் நான் முன்சொன்ன அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னர் அறிமுகமான வசதிகளில் ஒன்றுதான் தொடரறா தகவல் சேமிப்பு.

சாதாரணமாக தரவுகள் தகவல்கள் என்பவற்றை சேமிப்பது என்பது எமக்கு தெரியும். அது என்ன தொடரறா தகவல் சேமிப்பு? அதாவது உங்கள் தகவல்களை இணையம் மூலமாக எங்கிருந்தும் ஆளுகை செய்யக்கூடிய வகையில் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தில் சேமிப்பதும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வழி மூலமாக மீளப்பெறுவதும் உள்ளவற்றை புதுப்பித்தலுமே தொடரறா தகவல்  சேமிப்பு எனப்படுகிறது. இது Cloud Storage  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை விளக்குகின்ற வரிப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.
தொடரறா தகவல் சேமிப்பு எவ்வாறு இயங்குகின்றது? அதன் செயன்முறைகள் என்னவென்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டோம், இனி இந்த புதுநுட்பத்தை எவ்வாறு இணையத்தோடு இணைந்த எமது அன்றாட பணிகளில் பயன்படுத்துவது அதற்கான சேவை வழங்குனர்கள் பற்றி பார்க்கலாம். எமது தரவுகளை எமது கணினிகளின் வன்தட்டுக்களிலேயே (Hard Disk) எப்போதும் சேமித்திருப்போம். பாதுகாப்புக்காக கடவுச்சொற்கள் கூட அமைத்திருப்போம். வன்தட்டுக்களில் தரவுகளை சேமிப்பது சரிதான், அனால் அவை உங்கள் தரவுகளை 100%  சரியாக பேணுமா என்றால் நிச்சயமாக இல்லை. வன்தட்டுக்கள் பழுதடைதல், வைரஸ் தாக்கம், Data corrupt இப்படியாக பல காரணங்கள் சொல்லலாம். அதுபோலவே மிக முக்கியமான மற்றொன்று Data Backup. பலபேர் தங்கள் Backupகளை DVDகளிலோ அல்லது Hard Diskலேயே வைத்திருப்பார்கள். அவசர System Restore வேலைகளுக்கு இது கைகொடுத்தாலும் உண்மையில் இவ்வாறான Back Up ள் பாதுகாப்பற்றவைதான். அப்படியானால் இந்த வேலைகளை பாதுகாப்பாகவும் அதிக நாள் பேணக்கூடியவாறும் மேற்கொள்ள என்ன செய்யலாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் நான் சொன்ன தொடரறா தகவல் சேமிப்பு உதவிக்கு வருகிறது. தொடரறா சேவையகங்கள் (Online Servers) என்பவை பாதுகாப்பானதும் தனிப்பயனாக்கம் செய்யக்கூடியவை மட்டுமன்றி இணையம் மூலமாக எங்கிருந்தும் அணுக கூடியவை. எனவே முக்கியமான தரவு சேமிப்புக்கள், Back Up போன்ற வேலைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இந்த சேவையை இணையப்பரப்பில் பல நிறுவனங்கள் பலவிதமாக வழங்குகின்றன. அதில் நம்பகத்தன்மையானதும் பாதுகாப்பானவையுமாக சிறந்த 5 சேவைகளையும் அவற்றை பயன்படுத்துகின்ற வழிமுறைகளையும் தொகுத்து பகுதி02 இல் தருகிறேன். கருத்துக்களை மறக்காமல் எழுதுவதோடு உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள்….

October 12, 2013

மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்


நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக்கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான வசதிகளாலும் பாவனைக்கு இலகுவாக அமைவதனாலும் இப்போது பெரும்பாலான வகை மடிக்கணினிகளை மேசைக்கணினிகளின் விலையிலேயே கொள்வனவு செய்ய முடிவதும் அனைவரினதும் மோகமும் மடிக்கணினிகள் நோக்கி திருப்பியிருக்கிறது. இதனால் இப்போதெல்லாம் வீட்டுக்கொரு மடிக்கணினி என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மேசைக்கணினிகளை விட மடிக்கணினிகள் பல வசதிகளையும் பாவனைக்கு இலகுவாகவும் அமைந்தாலும் ஒரு மடிக்கணினியை நீண்டகாலம் ஒழுங்காக பாவிப்பதற்க்கும், அது சிக்கலின்றி இயங்குவதற்கும் அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

ஆனாலும் அவையும் சாதாரண ஒரு கணினி செய்கின்ற வேலையைதானே செய்கின்றன அவற்றை ஏன் விஷேடமாக பாரமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்? அல்லது வெறுமனே தூசு தட்டினால் போதமானது என்று சிலர் நினைக்கலாம் ஆனால் தூசு தட்டுவது மட்டும் ஒரு மடிக்கணினிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தாது. வன்பொருள் ரீதியாகவும் மென்பொருள் ரீதியாகவும் அவை பாரமரிக்கப்படும் போது மாத்திரமே மடிக்கணினிகள் சிறப்பாக இயங்கும். அவ்வாறு நீங்களும் உங்களுக்கென்று ஒரு மடிக்கணினியை உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு பயன்படக்கூடிய சில பராமரிப்பு முறைகளை தொகுத்து தருகின்றேன். அவற்றை பின்பற்றி உங்கள் மடிக்கணினிகளின் பாவனையையும் செயல்பாட்டையும் வினைத்திறனாக்குங்கள். 

#1 தூசுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். (Watch out for dust)

எமது சாதாரண மேசைக்கணினிகள் போன்றே மடிக்கணினிகளிலும் வெப்பம் மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்றுவதற்கான Processor Fan மற்றும் அதற்கான துவாரங்களும் காணப்படும். மடிக்கணினிகள் தொடர்ந்து பாவிக்கப்பட்டாலும் இந்த துவாரங்களை நாம் கவனிப்பதில்லை, இதனால் ஏனைய பாகங்களை விட இந்த துவாரங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் தூசி படிந்து காணப்படும். இந்நிலை நீடிக்குமானால் காலப்போக்கில் அந்த துவாரங்கள் அடைக்கபட்டு CPU Fan இனால் ஒழுங்காக வெப்பத்தை/தூசிகளை வெளியேற்ற முடியாமல் போவதுடன் அது அதிக வெப்பமான (Over heating) நிலையை தோற்றுவிக்கும். இதனால் உங்கள் மடிக்கணினி மட்டுமல்ல உங்கள் உடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம், எனவே உங்கள் மடிகணினிகளின் வன்பொருள் பாகங்களை வாரமொரு முறை சுத்தம் செய்யுங்கள்.

#2 குளிர்மையாக வைத்திருங்கள் (Keep it cool)

நீங்கள் அதிகமான நேரம் தொடர்ந்தும் மடிக்கணினியை பாவிப்பவராக இருந்தால் மின்விசிறியின் (Fan) அருகிலோ அல்லது குளிரூட்டி பொருத்தப்பட்ட இடத்திலோ நீங்கள் இருந்து உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதுடன் நேரடியான உங்கள் மடியில் வைத்து அதிகநேரம் மடிக்கணினிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாத போது Lap tray பயன்படுத்துங்கள் அல்லது Cushion போன்ற அமைப்புக்கள் மீது வைத்து பயன்படுத்துங்கள்.

#3 சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை பாவியுங்கள். (Install a firewall and antivirus software)

உங்கள் கணினியின் இயங்கு முறைமையானது (Operating System) நச்சுநிரல் (Virus) பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். அதிலும் இணையப் பயன்பாடு கொண்ட மடிக்கணினியாக இருந்தால் இந்த ஏற்பாடு அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் Apple இன் Mac வகை மடிக்கணினிகளையோ அல்லது Ubuntu போன்ற இயங்குதளங்களை பயன்படுத்தினால் இந்த கவலையில்லை. ஆனால் Microsoft இனது எந்தவொரு பதிப்பை (Xp, Vista, 7, 8) பயன்படுத்தினாலும் நிச்சயம் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவ வேண்டும். சில மடிக்கணினி வகைகளோடு Original Windows Genuine Windows தொகுப்பு வழங்கப்படும் அவ்வாறான கணினி கொண்டவர்கள் Microsoft இலவசமாக தருகின்ற Security Essentials மென்பொருளை பயன்படுத்தலாம் அதையே Microsoft பரிந்துரைக்கிறது. அவ்வாறில்லாமல் Pirated Version பயன்படுத்துபவர்கள் ஏதேனும் நல்ல Antivirus (Bit defender, Kaspersky, Avast, AVG, etc...) மென்பொருளை நிறுவுவது சிறந்தது.

#4 தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் (Eliminate unused programs)

நீங்கள் பயன்படுத்துகின்ற மடிக்கணினியை நீங்கள் அதிகமாக எந்த தேவைக்காக பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற மென்பொருள்களை மட்டுமே மடிக்கணினிகளில் நிறுவுங்கள், தேவையற்ற செயலிகளை (Program) நிறுவுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயற்பாட்டு வேகம் அதிகரிக்கப்படுவதுடன் மடிக்கணினியின் சீரான மற்றும் நெடுநாள் பாவனைக்கும் வழிவகுக்கும். மேலும் தேவையற்ற மென்பொருட்களை தவிர்ப்பது உங்கள் வன்தட்டின் (Hard disk) சேமிப்பளவினையும் (Storage space) அதிகரிக்கும் இதனால் முக்கியமான தரவுகளை அவசர வேளைகளில் சேமிக்கவும் முடியும்.

#5 உங்கள் தகவல்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள் (Defragment hard drives)

சாதாரணமாக எந்தவிதமான கணினியை பயன்படுத்துபவர்களும் அறிந்திருக்கின்ற விஷயம் என்று நினைக்கின்றேன். கணினியை பாராமரிக்கின்ற வழிகளில் மிக முக்கியமானது. காரணம் நீங்கள் அதிகளவு மென்பொருட்களையும் கோப்புக்களையும் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணினி ஒழுங்காக இயங்குவதற்கும் கணினியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். வன்தட்டில் அதிகளவு தரவுகள் பதியப்படுகின்ற போது அவை குறித்த ஒழுங்கில் சீராக அடுத்தடுத்து எப்போதும் பதியப்படுவதில்லை, இதனால் இடப்பற்றாகக்குறை, நீங்கள் தரவுகளை மீளப்பெற முயற்சிக்கின்ற போது அதற்க்கு அதிகளவு நேர விரயம் போன்ற பல சிக்கல்களும் தோன்றும், இதனை தவிர்க்க வன்தட்டில் குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை வரிசையாக அடுக்கி சீர்படுத்துகின்ற செயன்முறைதான் Defragment என்று சொல்லப்படுகின்றது. இதனை குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது செய்வது சிறந்தது. Start->Allprograms->Accessories->System Tools->Disk defragment சென்று உங்கள் மடிக்கணினியையும் ஒழுங்குபடுத்தலாம்.

#6 பதிவுகளை தெளிவுபடுத்துங்கள் (Clean your registry)

உங்கள் கணினியில் நீங்கள் எந்தவொரு மென்பொருளையும், கோப்புக்களையும் (Files) பயன்படுத்தும் போதோ அல்லது நிறுவும் போதோ உங்கள் கணினி அநைத செயல்பாடு ஒவ்வொன்றுக்குமான பதிவுகளை தன்னுள் சேமத்து (Registry) கொள்கிறது. இவை சீராக எந்தவித பிரச்சினைகளுமின்றி (Corrupt) இருக்கின்றபோது மட்டுமே கணினியானது சீராக இயங்கும். இந்த Registry Cleaner இல் ஏற்படும் பிரச்சினைகள் நேரடியாக வெளிக்காட்டப்படுவதில்லைஇவை மறைமுகமான பாதக விளைவுகளையே ஏற்படுத்தும், அதே போல அந்த பிரச்சினைகளை நேரடியாக சரிசெய்வது சிரமம் இதனால் இதற்கென்று சில Registry Cleaner மென்பொருட்கள் இருக்கின்றன. சிறந்த ஒரு மென்பொருளை நிறுவி உங்கள் கணினியின் Registryயை சோதித்து கொள்ளுங்கள்.

#7 தற்காலிக கோப்புக்களை நீக்கிவிடுங்கள் (Delete temporary internet files)

நீங்கள் இணையப்பக்கங்களில் உலாவருகின்ற போது உங்கள் உலாவிகளால் உங்கள் கணினிகளில் சேமிக்கப்படுகின்ற கோப்புக்கள் மற்றும் சில மென்பொருள்களால் தானாகவே உருவாக்கப்படுகின்ற கோப்புக்களே Temporary Files எனப்படுகின்றன. இவற்றை கிரமமாக (Regular) நீக்குவதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். Run இல் சென்று %Temp% என தட்டச்சு செய்து Ok அழுத்த கிடைக்கின்ற சாளரத்தில் (Window) உள்ள அனைத்து  கோப்புக்களையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள். ஓரிரண்டு கோப்புக்களை அழிக்க முடியாது, காரணம் அவை உங்கள் இயங்குமுறைமைக்கான கோப்புக்கள்.

#8 மின்கலங்களை பராமரியுங்கள். (Power surge protection)

மடிக்கணினிகளை பொறுத்தவரையில் அதனுடைய மின்கலங்கள் (Battery) மிக முக்கியமானவை. உங்கள் மடிக்கணினியின் மின்கலத்தை சிறப்பாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை கைக்கொள்ளுங்கள்.

  • எப்போதும் over charging செய்யாதீர்கள். Battery charge ஆனவுடன் மின் இணைப்பை துண்டியுங்கள்.
  • மடிக்கணினியை பாவிக்காத வேளைகளில் முக்கியமாக இரவுப் பொழுதுகளில் Charge இல்   வைத்துவிடாதீர்கள். மின்னோட்டத்தில் அதிகரிப்பு/குறைவு அடிக்கடி ஏற்படுவதால் அது batteryயை பாதிக்க கூடும்.
  • முடியுமானவரை Battery யை முழுமையாக பாவியுங்கள். Battery Low செய்தி கிடைத்த பின்னரே Charge செய்யுங்கள். ஆனால் முக்கியமான நேரங்களில் இது அவசியமில்லை.

நான் மேற்சொன்ன இந்த 8 வழிமுறைகளையும் தொடர்ந்து கைக்கொள்வதன் மூலம் உங்கள் மடிக்கணினியையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் எந்தவொரு செய்முறையும் கட்டாயமானது இல்லை. ஆனால் பொதுவாக ஒரு கணினி சீராக இயங்க இவற்றை கைக்கொள்ள வேண்டும். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 -ஷான்

Share With your friends

Related Posts Plugin for WordPress, Blogger...