13 அக்டோபர், 2013

தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 01)



ஆரம்பிக்க முன்…

மீண்டும் பல நாட்கள் கழித்து எனது வலைப்பதிவின் ஒரு பதிவு மூலமாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி… கடந்த சில வாரங்களாக எனது இந்த தளத்தின் வாசகர்களின் வருகை அதிகரித்திருக்கிறது, எனது வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கின்ற நண்பர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள்… முதலாவது தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக நீங்கள் இங்கு வந்து பதிவுகளை (Posts) வாசித்து பயன் பெறுகிறீர்கள் அதோடு நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களையும் மற்றும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் குறிப்பிடுங்கள் மேலும் இது போன்று தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக இருக்கின்ற உங்கள் நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுபோலவே மிக முக்கியமானது எனது முன்னைய கால பதிவுகளில் தரவிறக்கத்திற்காகவோ அல்லது ஏதேனும் இணையத்தள முகவரிகளோ பதிவுகளில் வழங்கப்பட்டிருந்தால் சேவையக மாற்றங்கள் காரணமாக தற்காலங்களில் அவை செயல்படாமல் போகலாம்… அவ்வாறான இணைப்புக்களை மறக்காமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.. நன்றி.

******************************************************************************************************************************************************************

கணினி துறையை பொறுத்தவரை இணையத்தின் தோற்றம் மிக முக்கிய படிக்கல் என்றாலும் இணையத்தின் வேகத்தினை துரிதப்படுத்திய அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னரே இணையத்தின் முழுமையான பயன்பாடும் அவசியமும் உணரப்பட்டதெனலாம். அந்தவகையில் இணையம் மூலமாக என்னவெல்லாம் சாதிக்கின்றோம், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் எமக்கு நன்கு தெரிந்ததே… அந்த வரிசையில் நான் முன்சொன்ன அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னர் அறிமுகமான வசதிகளில் ஒன்றுதான் தொடரறா தகவல் சேமிப்பு.

சாதாரணமாக தரவுகள் தகவல்கள் என்பவற்றை சேமிப்பது என்பது எமக்கு தெரியும். அது என்ன தொடரறா தகவல் சேமிப்பு? அதாவது உங்கள் தகவல்களை இணையம் மூலமாக எங்கிருந்தும் ஆளுகை செய்யக்கூடிய வகையில் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தில் சேமிப்பதும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வழி மூலமாக மீளப்பெறுவதும் உள்ளவற்றை புதுப்பித்தலுமே தொடரறா தகவல்  சேமிப்பு எனப்படுகிறது. இது Cloud Storage  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை விளக்குகின்ற வரிப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.




தொடரறா தகவல் சேமிப்பு எவ்வாறு இயங்குகின்றது? அதன் செயன்முறைகள் என்னவென்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டோம், இனி இந்த புதுநுட்பத்தை எவ்வாறு இணையத்தோடு இணைந்த எமது அன்றாட பணிகளில் பயன்படுத்துவது அதற்கான சேவை வழங்குனர்கள் பற்றி பார்க்கலாம். எமது தரவுகளை எமது கணினிகளின் வன்தட்டுக்களிலேயே (Hard Disk) எப்போதும் சேமித்திருப்போம். பாதுகாப்புக்காக கடவுச்சொற்கள் கூட அமைத்திருப்போம். வன்தட்டுக்களில் தரவுகளை சேமிப்பது சரிதான், அனால் அவை உங்கள் தரவுகளை 100%  சரியாக பேணுமா என்றால் நிச்சயமாக இல்லை. வன்தட்டுக்கள் பழுதடைதல், வைரஸ் தாக்கம், Data corrupt இப்படியாக பல காரணங்கள் சொல்லலாம். அதுபோலவே மிக முக்கியமான மற்றொன்று Data Backup. பலபேர் தங்கள் Backupகளை DVDகளிலோ அல்லது Hard Diskலேயே வைத்திருப்பார்கள். அவசர System Restore வேலைகளுக்கு இது கைகொடுத்தாலும் உண்மையில் இவ்வாறான Back Up ள் பாதுகாப்பற்றவைதான். அப்படியானால் இந்த வேலைகளை பாதுகாப்பாகவும் அதிக நாள் பேணக்கூடியவாறும் மேற்கொள்ள என்ன செய்யலாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் நான் சொன்ன தொடரறா தகவல் சேமிப்பு உதவிக்கு வருகிறது. தொடரறா சேவையகங்கள் (Online Servers) என்பவை பாதுகாப்பானதும் தனிப்பயனாக்கம் செய்யக்கூடியவை மட்டுமன்றி இணையம் மூலமாக எங்கிருந்தும் அணுக கூடியவை. எனவே முக்கியமான தரவு சேமிப்புக்கள், Back Up போன்ற வேலைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இந்த சேவையை இணையப்பரப்பில் பல நிறுவனங்கள் பலவிதமாக வழங்குகின்றன. அதில் நம்பகத்தன்மையானதும் பாதுகாப்பானவையுமாக சிறந்த 5 சேவைகளையும் அவற்றை பயன்படுத்துகின்ற வழிமுறைகளையும் தொகுத்து பகுதி02 இல் தருகிறேன். கருத்துக்களை மறக்காமல் எழுதுவதோடு உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள்….

கருத்துகள் இல்லை:

Share With your friends